தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.250 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி இரவுடன் தமிழகத்தில் உள்ள 5,330 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதன்பின்னர், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில், கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதாவது 43 நாட்களுக்கு பிறகு மே மாதம் 7ந் தேதி தமிழகத்தில் உள்ள 4,550 டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ரூ.170 கோடிக்கும், 2-வது நாளில் ரூ.140 கோடிக்கும் மது வகைகள் விற்பனையாகின. டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி உள்ளிட்டவை முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி, நீதிமன்ற உத்தரவுப்படி மே 9ம் தேதி முதல் மதுக்கடைகள் மூடப்பட்டது. அதன்பின்னர் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில், மே மாதம் 16ந் தேதி முதல் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 800 மதுக்கடைகள் மட்டும் திறக்கப்படாமலேயே இருந்தது.

ரூ.250 கோடி வசூல்

இந்த நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் கடந்த 18ம் தேதி முதல் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், பாதுகாப்புடன் வரிசையில் நிற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், ஒரு கடையில் நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.250.25 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.50.65 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.52.56 கோடிக்கும், திருச்சியில் ரூ.51.27 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால், மதுப்பிரியர்கள் நேற்றே அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி வைத்தனர். இதனால் சனிக்கிழமை மட்டும் அதிக அளவிற்கு விறப்பனை நடப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here