நடிகை வனிதா – பீட்டர் பாலின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்த நிலையில், பீட்டரின் முதல் மனைவி காவல் நிலையத்தில் அளித்த புகாரால் அவர்களது வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியுள்ளது.

கடந்து வந்த வாழ்க்கை

தென்னிந்திய திரை நட்சத்திர ஜோடியான விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியரின் மகள் நடிகை வனிதா. கடந்த 1995ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படம் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு மாணிக்கம் எனும் படத்தில் நடித்தார். இரு படங்களும் சரியாக ஓடாததால் சினிமாவை விட்டு விலகிய வனிதா, நடிகர் ஆகாஷை திருமணம் செய்து 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன்பின் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை திருமணம் செய்து பின்னர் 2010ல் அவரை விவாகரத்து செய்தார். வனிதாவிற்கு முதல் கணவர் மூலம் இரு குழந்தைகளும், இரண்டாவது கணவர் மூலம் ஒரு குழந்தையும் உள்ளனர். இதனிடையே நடன இயக்குனர் ராபர்ட்டுன் கிசுகிசுக்கப்பட்ட வனிதா, ஜூன் 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார்.

திருமணம்

இதுதொடர்பாக ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த வனிதா, தனது வாழ்க்கையில் நுழைந்த பீட்டர் பாலுடன் இருக்கும்போது பாதுகாப்பாக உணர்வதாகவும், என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் குறிப்பிடிருந்தார். எனது குழந்தைகளின் சம்மதத்தோடு தான் எங்கள் திருமணம் நடைபெறுவதாகவும் வனிதா குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே வனிதா – பீட்டர் பால் திருமணம் நேற்று மிக எளிமையாக நடந்தது. கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை நடிகை வனிதா கரம்பிடித்தார். வெள்ளை நிற திருமண உடையில் தேவதை போல் வனிதாவும், கோட் சூட்டில் பீட்டர் பாலும் அசத்தலாய் இருந்தனர். இருவரும் மோதிரம் மாற்றியக் கையோடு, உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து அன்பைப் பரிமாறிக்கொண்டனர். நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே இவர்களது திருமணத்தில் பங்கேற்றனர்.

தொடரும் சர்ச்சை

ஏற்கனவே வழக்கு, பஞ்சாயத்து என பல சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமான நடிகை வனிதா, சிறிது கால தனிமை வாழ்க்கைக்கு பின் பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையில் நுழைந்தார். ஆனால், வனிதாவே ஒதுங்கினாலும் சர்ச்சைகள் அவரைவிட்டு ஒதுங்குவது இல்லை. இல்லற வாழ்க்கையை தொடங்கிய முதல் நாளே பீட்டரின் முதல் மனைவி மூலம் வனிதாவுக்கு பிரச்சனை வந்துவிட்டது. பீட்டர் பால் மீது அவரின் மனைவி எலிசபெத் ஹெலன், வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பீட்டருடன் திருமணமாகி தனக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், முறையாக விவாகரத்து அளிக்காமல் வனிதாவை திருமணம் செய்ததாக புகார் தெரிவித்தார்.

விவாகரத்து அளிக்கவில்லை

கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை 7 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், வனிதாவை பீட்டர் பால் திருமணம் செய்துள்ளார். முறையாக விவாகரத்து அளித்த பிறகே, வனிதாவை திருமணம் செய்துகொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறியதாகவும், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்ததாகவும் எலிசபெத் ஹெலன் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். பீட்டரின் முதல் மனைவி மூலம் நடிகை வனிதாவுக்கு இந்த வாழ்க்கையும் கசக்கத் தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here