ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

கோவில் நடை திறப்பு

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாள் நடை திறக்கப்படுவது வழக்கம். பிறகு 5 நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

சிறப்பு பூஜைகள்

மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். பின்னர் சிறப்பு பூஜை எதுவும் நடைபெறாது என்பதால், கோவில் நடை இரவு 7.30 மணிக்கு அடைக்கப்படும். நாளை அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகம், உஷ பூஜை மற்றும் உச்ச பூஜை நடைபெறும். காலை 10 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு தீபாராதனை நடத்தப்பட்டு, இரவு 7.30 மணிக்கு நடை சாத்தப்படும். வருகிற 21 ஆம் தேதி வரை 5 நாட்கள் ஆவணி மாத சிறப்பு பூஜைக்காக கோயில் திறக்கப்படுகிறது.

பக்தர்களுக்கு அனுமதியில்லை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டு உள்ளது. இதனால், நெய் அபிஷேகம், படி பூஜை போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here