நவராத்திரி புண்ணிய காலத்தில் வரும் எட்டாவது அஷ்டமி தினம் ‘துர்காஷ்டமி’ ஆகும். சமய நூல்களும், சாஸ்திர நூல்களும் போற்றும் அதியற்புதமான புண்ணிய தினங்களில் ஒன்றான துர்காஷ்டமி, தமிழக கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மேலும் வீடுகளில் கொலு வைப்பதும் வழக்கம்.

துர்காஷ்டமியின் சிறப்புகள்

இந்நாளுக்கு மகாஷ்டமி, வீராஷ்டமி என்ற பெயர்களும் உண்டு. துர்காஷ்டமி தினத்தில் துர்கையின் நெற்றியிலிருந்து சாமுண்டா எனும் உக்கிர சக்தி தோன்றி, சண்டன் – முண்டன், ரக்த பீஜன் ஆகிய அசுரர்களை அழித்தாள். எனவே இந்த நாள் அதீத சக்தியும், வல்லமையும் கொண்ட நாளாகத் திகழ்கிறது. துர்காதேவியின் அம்சமான 64 யோகினிகளும் பிராம்மி, மாஹேஷ்வரி, வைஷ்ணவி, வாராஹி, நரசிம்ஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சக்திகளும் ஒன்றினைந்து செயலாற்றும் நாள் இது என்கின்றன ஞான நூல்கள். ஆகவே இந்த தினத்தில் அம்பாள் தரிசனமும், வழிபாடும் பன்மடங்கு பலனை அள்ளித் தரும் என்பர்.

கொண்டாட்டம்

துர்காஷ்டமி திருநாளை வட இந்தியாவில், மக்கள் வண்ண வண்ண ஆடைகள் அணிந்து கர்பா நடனமாடிக் கொண்டாடுவார்கள். தேவிக்குப் புனித பலியாக எலுமிச்சை, தேங்காய், பூசணிக்காய்கள் உடைத்து வழிபடுவர். சிறுமியர் தேவியாக அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் அழைத்து வரப்படுவார்கள். மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

வழிபாட்டு முறைகளும், பலன்களும்

ராகு கால நேரத்தில் துர்கையை வழிபடுவது விசேஷம். வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள் துர்காஷ்டமி நாளில் ரக்தபீஜன் என்ற அசுரனை வதம் செய்த பிறகு கருணையுடன் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் அம்பாளை அலங்கரித்து வழிபட வேண்டும். அணிமா முதலான எட்டு சக்திகளும் புடைசூழ வீற்றிருக்கும் தேவி, அபய வரதம், கரும்பு, வில் மற்றும் அம்பு ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவாள். இந்நாளில் 9 வயதுள்ள குழந்தையை துர்கையாக பூஜிக்க வேண்டும். இதனால் செயற்கரிய செயல்களையும் எளிதில் செய்து முடிக்கும் வல்லமையும் கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் விலகும். சத்ரு பயம் நீங்கும். அன்றைய தினம் கொலு வைக்காதவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள அம்பிகை படம் அல்லது விக்ரத்துக்கு முல்லை, மல்லிகை, வெண் தாமரை மலர்கள் சமர்ப்பித்து, சாம்பிராணி தூபமிட்டு, நல்லெண்ணை தீபமேற்றி, தேங்காய் சாதம், கொண்டைக்கடலை சுண்டல் ஆகியவற்றைப் படைத்து துர்கையை வணங்கலாம். அப்போது துர்கைக்கு உரிய பாடல்களை மனமுருகிப் பாடித் துதிக்கலாம். வீட்டில் வழிபட வசதி இல்லாதவர்கள், அன்றைய தினம் அருகிலிருக்கும் சிவாலயம் சென்று அங்கு கோஷ்டத்தில் எழுந்தருளியிருக்கும் துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி, செவ்வரளி மாலை மற்றும் சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடலாம். துர்கா என்ற திருநாமத்தை பலமுறை இருந்த இடத்திலிருந்தே உச்சரித்தால் துன்பங்கள் நீங்கி சுபிட்சம் பெருகும். தரித்திரத்தைப் போக்கும். பாவங்களைப் போக்கும். தீய சக்திகளால் உண்டான தொல்லைகள், சித்தப் பிரமை, சாபங்கள், தோஷங்கள் எல்லாம் விலகி வாழ்வில் நலம் உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here