இ-பாஸ் முறையை எளிமையாக்கவும், குறைபாடுகளை களையவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எளிமையாக்க உத்தரவு

சேலத்தில் வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு  பணிகள் மற்றும் அணைகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு பின் பேசிய முதலமைச்சர், கொரோனா சூழலிலும் வளர்ச்சிப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது என்றும் அரசின் வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சேலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பாலங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்த முதல்வர், சாலை விரிவாக்க பணிகளும் தொடங்கப்பட உள்ளதாக கூறினார். முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் வழங்கப்படும் என்றும் இ-பாஸ் முறையை எளிமையாக்கவும், குறைபாடுகளை களையவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்சித் தலைவராக எண்ணவில்லை

அதிமுக கொடி குறித்து எஸ்.வி. சேகர் தெரிவித்த விமர்சனம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, எஸ்.வி.சேகர் பேசுவதெற்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என்றார். அவரை ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவராக எண்ணவில்லை என்றும் அவர் பாஜகவில் இருக்கிறார் என்கிறார்கள் எனவும் கூறினார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மோடி பிரதமராக வரவேண்டும் என நாங்கள் எல்லோரும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தோம். ஆனால் எஸ்.வி.சேகர் என்ன செய்தார்? என்றும் முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். எஸ்.வி.சேகரை ஒரு கட்சித் தலைவராக நாங்கள் கருதவில்லை எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here