தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கியதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா

சினிமாவில் கூட சமூகம் சார்ந்த கருத்துக்களை முன்வைத்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்தார். அப்போது ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையை பார்வையிட்ட அவர், அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை அறிந்து, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு பள்ளிகள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். இருப்பினும் தனது கருத்தில் பின்வாங்காத ஜோதிகாவுக்கு அவரது கணவர் சூர்யா மற்றும் ரசிகர்கள் உறுதுணையாக இருந்தனர்.

ரூ.25 லட்சம் நிதியுதவி

இந்நிலையில், நடிகை ஜோதிகா தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாகவும் ஜோதிகா வழங்கியுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருது துரை ஒப்புதலின் பேரில், இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டுள்ளது. ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் இரா. சரவணன் வழங்க, அமைச்சர் விஜயபாஸ்கர் அதனை பெற்றுக்கொண்டார். “ஜோதிகா செய்திருக்கும் உதவி மகத்தானது, பாராட்டத்தக்கது என்றும் அரசின் சார்பில் நன்றி” தெரிவித்துக்கொள்வதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

குவியும் பாராட்டு

நடிகை ஜோதிகாவின் சமூக அக்கறைக்குத் தலை வணங்குவதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த் ராவ் கூறியுள்ளார். தாய்மார்கள், குழந்தைகள் நலனுக்காக ரூ. 25 லட்ச ரூபாய் வழங்கிய ஜோதிகாவின் பெருமனதுக்கு நன்றி என்றும் அரசின் திட்டங்களுடன் மக்களின் பங்களிப்பும் கைகோர்க்கும்போது அது எவ்வளவு சிறப்பாக அமையும் என்பதற்கு ஜோதிகாவின் உதவி சரியான முன் உதாரணம் என்றும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருது துரை தெரிவித்துள்ளார். நடிகை ஜோதிகாவின் இந்த உதவிக்கு ரசிகர்கள், திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here