நடிகர் விஜய் பிடிவாதமாக தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளாததால் விஜய் 65 திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய்

தமிழ் சினிமாவின் படைத் தளபதியாக விளங்குபவர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது திரைப்படங்கள் வெளியாகும் நாள் தான் அவரது ரசிகர்களுக்கு பொங்கல், தீபாவளி எல்லாம். அந்த அளவிற்கு திருவிழா போல விஜய்யின் படங்களை கொண்டாடுவார்கள். நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் திரை உலகிற்கு வந்த விஜய், இன்று வரை நட்சத்திரமாகவே ஜொலிக்கிறார். தனது அப்பா மூலமாக சினிமாவிற்குள் நுழைந்தாலும், கடினமான முயற்சியால் திரையுலகில் பல வெற்றிகளை சாதித்தார்.

பிகில் படம் பிரச்சனை 

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் தான் “பிகில்”. இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட காலத்தலிருந்தே பிரச்சனை மேல் பிரச்சனை வந்தது. படத்தின் ஆடியோ லாஞ்சிலும் பிரச்சனை ஏற்பட்டு ஒரு வழியாக படம் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்து அப்படத்திற்கு விமர்சனம் கலவையாகவே வந்தன. ஒரு கட்டத்தில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் படம் ஓடவில்லை, போட்ட பணம் எல்லாம் நஷ்டம் என தயாரிப்பாளரிடம் முறையிட்டனர். இன்றுவரை அந்த பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா? என்பது தெரியவில்லை. இதன்பின் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்தார். அதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்த விஜய்யை அணுகிய வருமான வரித்துறையினர், அவரை அழைத்துச்சென்று வீட்டில் சோதனை நடத்தினர். அதேசமயம் பிகில் பட தயாரிப்பு நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. விஜய் அதிக சம்பளம் வாங்குகிறார், அதனால் தான் இந்த சோதனை எல்லாம் என்று சொல்லப்பட்டது.

 பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் 

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் ‘சன் பிக்சர்ஸ்’. இதனை சன் டிவி உரிமையாளரான கலாநிதி மாறன் நடத்தி வருகிறார். முதலில் படங்களை வாங்கி வந்த அந்நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான எந்திரன் திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்தது. இப்படம் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதன்பின் சிறிது காலம் எந்த படங்களையும் தயாரிக்கவில்லை. தற்போது கடந்த இரண்டு வருடங்களாக பல படங்களை தயாரித்து, அதில் வெற்றியும் கண்டுள்ளனர். இப்படிபட்ட நிலையில் விஜய்யின் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் ஏ.ஆர். முருகதாஸ் அப்படத்தை இயக்குகிறார் என்றும் கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு, லாக்டவுன் என சில மாதங்கள் ஒடின. தற்போது மீண்டும் இந்தப் படத்தை பற்றிய ஒரு செய்தி வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் தான் விஜய் 65 என்று கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படத்தின் இயக்குநர் முருகதாஸ் மற்றும் விஜய்யிடம் சம்பளத்தில் ஒரு தொகையை குறைத்துக் கொள்ளும்படி சன் பிக்சர்ஸ் நிறுவனம் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

கைவிடப்பட்டதா?

இதனை ஏ.ஆர். முருகதாஸ் முதலில் மறுத்தாலும், பின்னர் சம்பளத்தை குறைத்துக்கொள்ள சம்மதித்தாகக் கூறப்படுகிறது. ஆனால் விஜய் மட்டும் பிடிவாதமாக சம்பளத்தை குறைக்க முடியாது என கூறிவிட்டாராம். இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் 65 படத்தின் தயாரிப்பை கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், விஜய் தனது கால்ஷீட்டை தேனாண்டாள் பிலிம்ஸ்க்கு கொடுத்துவிட்டதாகவும், அவர்களுக்கு மட்டும் சம்பளத்தை குறைத்து கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here