நடிகர் விஷால் அலுவலகத்தில் ரூ.45 லட்சம் பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த பெண் ஊழியர் மீது விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

ரூ. 45 லட்சம் மோசடி

சென்னை வடபழனியில் உள்ள குமரன் காலனி பகுதியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. துப்பறிவாளன், சக்ரா ஆகிய படங்களை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் இந்நிறுவனத்தில், விஷாலின் ஆடிட்டர் அலுவலக கணக்குகளை சரிபார்த்த போது, 45 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அலுவலகத்தின் மேலாளரும், விஷாலின் உதவியாளருமான ஹரிகிருஷ்ணன், கடந்த 3ம் தேதி வடபழனி காவல் உதவி ஆணையரிடம் புகார் அளித்தார்.

பெண் ஊழியர் மீது புகார்

அதில், தங்கள் அலுவலகத்தில் கடந்த 6 வருடங்களாக கணக்காளராக பணிபுரிந்த ரம்யா என்ற பெண் 45 லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறிது சிறிதாக பணத்தை கையாடல் செய்து அவரது உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்திவிட்டதாகவும், சம்மந்தப்பட்ட அந்தப் பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது. புகாரைப் பெற்றுக்கொண்ட உதவி ஆணையர், அதனை விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

வழக்குப்பதிவு

இதனையடுத்து விஷால் அலுவலக ஊழியர்கள், சம்பந்தப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலாளர் அளித்த ஆவணங்கள், இ-மெயில் உள்ளிட்ட ஆதாரங்களையும் அவர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் பெண் கணக்காளர் ரம்யா மீது நம்பிக்கை மோசடி, பொய்யான ஆவணத்தைத் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ரம்யாவைத் தேடி வருகின்றனர். ரம்யா தவிர அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு இந்த மோசடியில் தொடர்பிருந்தால் அவர்கள் மீதும் வழக்குத் தொடரப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here