தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்திற்கு திரைப்பிரபலங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

தந்தை, மகன் மரணம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20-ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி அவரையும் அவரது தந்தை ஜெயராஜையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையே, கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த பென்னிக்ஸுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறைக் காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த நிலையில், தந்தை ஜெயராஜூம் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த உயிரிழந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இனிஒருவர் இதுபோல உயிரிழக்கக்கூடாது

தந்தை, மகன் அடுத்தடுத்து மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். “காவல்துறை என்றாலே அடித்து சித்ரவதை செய்வதுதான் என்ற எண்ணத்தை உருவாக்கும் சாத்தான்குள போலீஸ் அதிகாரிகள் போன்றோரின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்போலீஸ் அதிகாரிகள் கண்டிப்பு குரல் எழுப்ப வேண்டும்.. இங்கே இறந்த இருவருக்கான நீதி என்பதை தாண்டி இனிஒருவர் இதுபோல உயிரிழக்கக்கூடாது என இயக்குநர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அரசுக்கு கேள்வி

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ள பதிவில்; பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், மிக கொடூரமாக நிகழ்த்தபட்டிருக்கும் சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலைக்கு அவர்களின் உடல் நலக்குறைபாடு தான் காரணம் என்று அறிக்கை விடுத்து, படுகொலைக்கு காரணமான காவலர்களை காப்பதற்கு துணியும் தமிழக அரசே! நீங்கள் தான் மக்களின் அரசா?? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மிகப்பெரிய இழப்பு

நடிகர் பால சரவணன் வெளியிட்டுள்ள பதிவில்; அநியாயங்களும் அநீதிகளும் நடந்து கொண்டேதான் இருக்கப் போகிறது நாமும் அதை கடந்து போய் கொண்டேதான் இருக்க போகிறோம், எத்தனை பெரிய இழப்பு பென்னிக்ஸ் அவர்களின் தாய்க்கு… ரகுகணேஷ், ஶ்ரீதர், பாலகிருஷ்ணன் உண்மையில் உங்களது குடும்பத்திற்குதான் இது மிகப்பெரிய இழப்பு.. வெட்கிதலைகுனியுங்கள்… எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடும் கண்டனம்

இதேபோல், நடிகர்கள் ஜெயம்ரவி, சாந்தனு நடிகைகள் குஷ்பு, மஹிமா நம்பியார், அதுல்யா ரவி, இயக்குநர் கார்த்திக்சுப்புராஜ் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தந்தை, மகன் மரணமடைந்த சம்பவத்திற்கு நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here