தனது அரை நிர்வாண உடலில் குழந்தைகளை வைத்து ஓவியம் வரைந்து அதை வெளியிட்டதற்காக பெண்ணிய ஆர்வலர் ரெஹானா பாத்திமா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சை நாயகி

கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இருமுடிகட்டி நுழைய முயன்று சர்ச்சையை ஏற்படுத்தியவர் ரெஹானா பாத்திமா. சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால், ரெஹானா பாத்திமா பணியாற்றிய பிஎஸ்என்எல் நிறுவனம், அவருக்கு கட்டாய ஓய்வு அளித்து, வேலையை விட்டும் நீக்கியது.

அரை நிர்வாண ஓவியம்

இந்த சூழலில் மற்றொரு சர்ச்சையில் ரெஹானா பாத்திமா சிக்கியுள்ளார். தனது சிறு குழந்தைகளை, தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்து, உடலும் மற்றும் அரசியலும் என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டார். மேலும், அந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை முகநூலிலும் பதிவிட்டு, சர்ச்சைக்குரிய வகையில் ஆண், பெண் உடல் குறித்த கருத்துக்களையும் ரெஹானா பாத்திமா பதிவிட்டிருந்தார். ஏற்கெனவே சர்ச்சைகளுக்கு பெயரெடுத்த ரெஹானா பாத்திமா வெளியிட்ட இந்த வீடியோ கேரளாவில் வைரலானது. அதேசமயம், எதிர்ப்பும் கிளம்பியது. தனது குழந்தைகளை வைத்து அரை நிர்வாண உடலில் எவ்வாறு ஓவியம் வரையலாம், இது குழந்தை பாலியல் சீண்டல்கள் என்று பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

போக்ஸோ வழக்கு

இதையடுத்து, பத்திணம்திட்டா மாவட்ட பாஜக தலைவர் ஏ.வி. அருண் பிரகாஷ், ரெஹானா பாத்திமாவின் இந்த சர்ச்சைக்குரிய வீடியோ தொடர்பாக திருவல்லா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, மாநில குழந்தைகள் உரிமை ஆணையத்துக்கும் தகவல் சென்றது. இதுதொடர்பான முழுமையான அறிக்கையை 10 நாட்களில் தாக்கல் செய்யக்கோரி பத்திணம்திட்டா மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்கு மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளை வைத்து தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்து அதை வீடியோவாக வெளியிட்டதால், போக்ஸோ சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் ரெஹானா பாத்திமா மீது திருவல்லா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து திருவல்லா காவல் நிலைய ஆய்வாளர் கூறுகையில்; “ரெஹானா பாத்திமா மீது போக்ஸோ சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். எதற்காக இந்த வீடியோவை பாத்திமா எடுத்தார், ஏன் பதிவேற்றம் செய்தார், உள்நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here