தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், கதாசிரியருமான மணிவண்ணன் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். மணிவண்ணன் 2013ம் ஆண்டு ஜூன் 15ந் தேதியன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். மணிவண்ணன் ஏற்கனவே இதய அறுவைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார். மணிவண்ணனுக்கு ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.

மணிவண்ணனும் சினிமாவும்

இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கி வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல், நடிகராகவும் பல வெற்றி படங்களை கொடுத்தவர் மணிவண்ணன். 1982இல் முதன்முதலில் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அந்த காலகட்டத்திலேயே த்ரில்லர் கலந்த ஆக்ஷன் படம் எடுத்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் மணிவண்ணன். அப்பொழுதே ஹாலிவுட் தரத்தில் ‘நூறாவது நாள்’ என்ற த்ரில்லர் படத்தை எடுத்து அசத்தியவர். அந்த படம் அதிக நாட்கள் ஓடி, நல்ல வசூலையும், நல்ல பெயரையும் அவருக்கு பெற்றுத் தந்தது.

கடவுள் இல்லை

பல திரைப்படங்களில் கடவுளே இல்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார் மணிவண்ணன். இதனை பலரும் விமர்சித்தாலும், தான் சொல்ல வந்த கருத்தை எந்தத் தயக்கமும் இன்றி உறுதியுடன் கூறுவார்.

அமாவாசை சத்யராஜ்

‘அமைதிப்படை’ திரைப்படத்தில் அமாவாசை வில்லனாக நடித்த சத்யராஜ், அந்தப் படத்தில் நடித்த பிறகு யார் கதை சொல்ல வந்தாலும் எனக்கு அமாவாசையை தாண்டி ஒரு கதையை சித்தரித்து வாருங்கள் என்று கூறியுள்ளார். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் சத்யராஜை ஈர்த்துவிட்டது. இப்பொழுது கூட பல மேடைகளில் எனக்கு அமாவாசை கதாபாத்திரம்தான் ரொம்ப பிடிக்கும் என்று கூறி வருகிறார் சத்யராஜ். அதற்கு இணையான கதாபாத்திரம் என்னால் இனிமேல் நடிக்க முடியாது என்றும் அமாவாசை கதாபாத்திரம் முழுக்க முழுக்க மணிவண்ணனால் செதுக்கப்பட்டது என்றும் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா எனக்கு அப்பா

மணிவண்ணன் பாரதிராஜாவை தனது அப்பா என்றுதான் எப்போதும் அழைப்பார். பாரதிராஜா அவர்கள் தான் மணிவண்ணனுக்கு திருமணமும் செய்து வைத்திருக்கிறார். இயக்குநர் இமயம் பாரதிராஜா முதன்முதலில் மணிவண்ணனை ரஜினியுடன் கொடி பறக்குது படம் மூலம் வில்லனாக அறிமுகம் செய்து வைத்தார்.

ரஜினி, கமல் மீது நம்பிக்கையில்லை

மணிவண்ணன் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். ஆனால், இதில் ஒரு படம் கூட கமல், ரஜினியை வைத்து எடுக்கவில்லை. இதனை ஏன் என்று கேட்டதற்கு, எனக்கு என்னுடைய ஸ்கிரிப்ட் மீது நம்பிக்கை உள்ளது, நடிகர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார். மறைந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பவர்களில் மணிவண்ணனும் ஒருவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here