மூவரசம்பட்டு கோயில் குளத்தில் மூழ்கி 5 இளம் அர்ச்சகர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

கவன ஈர்ப்பு தீர்மானம்

சென்னை நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

அமைச்சர் விளக்கம்

இதனைதொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். அவர் பேசியதாவது; “இதயம் இருப்பவர்கள் அனைவரும் இறக்கப்படும் துயர சம்பவம் இது. இது கோயிலின் குளம் இல்லை. பஞ்சாயத்து குளம். கடந்த 4 ஆண்டுகளாகத்தான் இந்தக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. இந்தக் கோயில் ஒரு டிரஸ்ட்டின் கீழ் உள்ளது. கடந்த ஆண்டு எந்தவித அனுமதியும் இல்லாமல் கும்பாபிஷேகம் செய்ய முயற்சி செய்தார்கள். உடனடியாக அந்தக் கோயிலுக்கு தர்க்கார் நியமனம் செய்யப்பட்டார். டிரஸ்ட் சார்பில் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்கள். இது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதற்குள் இந்தச் சம்பவத்தில் விலை மதிப்பு இல்லாத மனித உயிர்கள் பறிபோய் உள்ளன. இந்த நிகழ்ச்சி குறித்து அவர்கள் காவல்துறையிடம் தெரிவிக்கவில்லை. இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்”. இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here