தன்னை கைது செய்து படுகொலை செய்ய பாகிஸ்தான் போலீசார் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மோதல்

பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்த போது வெளிநாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுகளை, அரசு கருவூலத்தில் சேர்க்காமல் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி இம்ரான் கானை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனை அறிந்த இம்ரான் கான் கட்சி தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்துள்ளனர். அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கண்ணீர்புகை குண்டுகள் வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தொண்டர்களை விரட்டும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் லாகூரில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதுதான் நோக்கம்

இந்த நிலையில், போலீசார் தன்னை கடத்திச் சென்று கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது; “கைது நடவடிக்கை என்பது வெறும் நாடகம். என்னை கடத்தி சென்று படுகொலை செய்வதே அவர்களின் உண்மையான நோக்கம். தண்ணீரை பீய்ச்சி அடித்தார்கள், கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள், இப்போது துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்து போட்டு அளித்தால் போலீசார் ஏற்க மறுக்கின்றனர். அவர்களின் நோக்கம் தெளிவாக தெரிகிறது” என அவர் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here