ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் வருகிற 27-ம் இடைத்தேர்தல் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆன்ந்த் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.

தீவிர வாக்கு சேகரிப்பு

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உட்பட அமைச்சர்கள், திமுக பிரமுகர்கள் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுக்கு ஆதரவாக கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வர் பயணம்

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஈரோட்டில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்லும் முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் ஈரோடு சென்று சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீதிவீதியாக சென்று வாக்கு கேட்கிறார். பெரிய வலசு, பாரதி தியேட்டர், சக்தி ரோடு பேருந்து நிலையம், மெட்ராஸ் ஓட்டல், மஜீத் வீதி, பூம்புகார் நகர், காந்திநகர், வல்லரசம்பட்டி, சம்பத் நகர், அம்மு மெஸ் பிரிவு, சின்னமுத்து வீதி, முனிசிபல் காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் ‘கை’ சின்னத்துக்கு முதலமைச்சர் ஓட்டு கேட்கிறார்.

உஷார் நிலையில் போலீஸ்

இடைத்தேர்தலையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள் ஈரோட்டில் முகாமிடுவதால் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் வெளியூரில் இருந்து பிரச்சாரத்துக்கு வந்தவர்கள் நாளை மாலை 6 மணிக்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ய்ருப்பினும் ஈரோட்டில் முகாமிட்டிருக்கும் திமுக – அதிமுகவினர் தொகுதிக்கு பக்கத்தில் உள்ள ஊர்களில் முகாமிட்டு அங்கிருந்தபடி தேர்தல் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனால் ஈரோடு தொகுதிகளில் மோதல் ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here