கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் கட்டணம்

2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் சிங்கம் 3, பைரவா போன்ற படங்கள் பண்டிகை தினங்களில் வெளியான பொழுது, திரையரங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், கூதல் கட்டணம் வசூல் தொடர்பாக அரசு மற்றும் காவல் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

அபராதம்

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வந்ததாகவும், அந்த புகார் மீதான விசாரணையில் கட்டணத்தை விட ரூ.100 அதிகமாக வசூல் செய்தது தெரியவந்தது. அதற்காக சம்பந்தப்பட்ட திரையரங்குகளிடம் தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கண்காணிப்பு தொடர வேண்டும்

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இதுபோன்ற நடவடிக்கையை தொடர்ந்து எடுக்க வேண்டும் எனக் கூறிய அவர், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், அந்த கண்காணிப்பு நடவடிக்கை தொடர வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here