‘மாண்டஸ்’ புயல் எச்சரிக்கையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று பிற்பகல் மற்றும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்கும் ‘மாண்டஸ்’

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு 11.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘மாண்டஸ்’ புயல் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாகவும், காரைக்காலுக்கு கிழக்கு – தென் கிழக்கே 500 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 580 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுச்சேரி  – ஸ்ரீஹரிகோட்டா இடையே 9-ம் தேதி நள்ளிரவு ‘மாண்டஸ்’ புயல் கரையை கடக்கக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு

‘மாண்டஸ்’ புயல் நெருங்கி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஏற்கனவே தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்திலும் கனமழை காரணமாக இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை (09.12.2022) வரை, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு விடுமுறை அளித்து வேலூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here