ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்பட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதுாரில் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பேரரிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 26 பேருக்கு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் மேல்முறையீடு வழக்கில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதியானது. கடந்த 2000-ம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தால் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

அதிரடி தீர்ப்பு

பின்னர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்து உத்தரவிட்டது. அதன் பின்னர், முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் பி.ஆர்.கவாய் தலைமையிலான நீதிமன்ற அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சிறையிலுள்ள நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் வழக்கில் பிறப்பித்த உத்தரவு குற்றம்சாட்டப்பட்ட மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

முதல்வர் வரவேற்பு

உச்ச நீதிமன்ற இந்த உத்தரவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் தீர்மானங்களை ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு ஒரு ஆதாரம் என்று கூறியுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நடத்திய வலிமையான சட்டப்பேராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது. மனித நேயத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்டு வரும் அனைவருக்குமான வெற்றி என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

வரவேற்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் ஆதரவளிக்கக் கூடிய தீர்ப்பு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் செய்ய வேண்டிய கடமையை உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here