சென்னை – மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூருவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உற்சாக வரவேற்பு

கர்நாடகம், தமிழகம் மற்றும் ஆந்திராவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி இன்றும், நாளையும் பங்கேற்க உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்த பிரதமருக்கு கர்நாடக ஆளுநர் தவார்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் பெங்களூரு விதான் சவுதா அருகே இருக்கும் கன்னடத் துறவி கவிஞர் கனகா தாசா சிலை மற்றும் மகிரிஷி வால்மீகி சிலைக்கும் பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அங்கிருந்து பிரதமர் மோடி புறப்படும் முன், விதான் சவுதா பகுதியில் ஏராளமான பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்கள் குழுமி வரவேற்புத் தெரிவித்தனர். இதைப் பார்ததுக்கொண்டே புறப்பட்ட பிரதமர் மோடி திடீரென காரை நிறுத்தி, காரில் இருந்தவாரே பாஜக தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் பார்த்து கையசைத்து வாழ்த்துக்களைக் கூறினார்.

பிரதமர் தொடங்கி வைத்தார்

பின்னர் கே.எஸ்.ஆர். ரயில் நிலையத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரு வழியாக சென்னையிலிருந்து மைசூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதுதவிர, பாரத் கவுரவ் காசி தர்ஷன் ரயிலையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை – மைசூரு

சென்னையிலிருந்து மைசூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், வாரத்தில் புதன்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இயக்கப்படும். இந்த ரயில் பிரதமர் மோடியால் இன்று தொடங்கப்பட்டாலும், வர்த்தக ரீதியாக 12-ம் தேதி முதல் தனது பயணத்தை தொடங்க உள்ளது. சென்னையிலிருந்து காலை 5.50 மணிக்குப் புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், காலை 10.25 மணிக்கு பெங்களூரு சென்றடையும். அங்கிருந்து 12.30 மணிக்கு மைசூரு சென்றடையும். சென்னையிலிருந்து மைசூருக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க சேர் காரில் ரூ.1,200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சொகுசு இருக்கைக்கு ரூ.2,295 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து பெங்களூரு வரை செல்ல சேர் காரில் செல்ல ரூ.995 கட்டணமாகவும், எக்ஸிகியூட்டிவ் காரில் செல்ல ரூ.1,885 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 4 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று தொடங்கப்பட்டுள்ளது 5-வது வந்தே பாரத் எஸ்பிரஸ் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here