பண மோசடியில் ஈடுபட்டதாக சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்கொலை

‘பாண்டியன் ஸ்டோர்’ உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் 9-ந் தேதி சென்னை பூந்தமல்லி அருகே உள்ள நட்சத்திர ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தற்கொலை குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சித்ராவின் கணவர் ஹேம்நாத், சித்ராவின் தாய் – தந்தை, ஹோட்டல் ஊழியர்கள், இறுதியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் ஹேம்நாத் மற்றும் சித்ராவுக்கு சொந்தமான செல்போன்களில் பதிவான தகவல்களை வைத்து விசாரணை நடத்தியதில், பல்வேறு தகவல்கள் வெளியானது. இதன் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சித்ராவுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கைது

இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஆஷா மனோகரன் என்பவரிடம், மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.1.5 கோடி பண மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெ.ஜெ.நகர் போலீசார் ஹேம்நாத் மீது வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தனர். தற்போது நீதிமன்ற உத்தரவையடுத்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி மேலும் இருவரிடம் ஹேம்நாத மோசடி செய்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here