வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெளுத்து வாங்கிய மழை

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால், செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட பல ஏரிகள் நிரம்பின. இதன்காரணமாக செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதையடுத்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கனமழை பெய்யும்

இதனிடையே, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய பகுதிகளின் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் கூறியுள்ளது.

பரவலாக மழை

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேளம்பாக்கம் 21 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், தாம்பரம் தலா 16 செ.மீ., MGR நகர் (சென்னை) 15 செ.மீ., சோழிங்கநல்லூர், DGP அலுவலகம் தலா 14 செ.மீ., செம்பரம்பக்கம், பூவிருந்தவல்லி, கொரட்டூர், தரமணி, சென்னை விமான நிலையம் தலா 13 செ.மீ., பெரம்பூர் 12 செ.மீ., ஆலந்தூர், அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர் தலா 11 செ.மீ., கும்மிடிப்பூண்டி, நுங்கம்பாக்கம் தலா 9 செ.மீ., ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் 8 செ.மீ., திருப்போரூர், தாமரைப்பக்கம், சோழவரம் தலா 7 செ.மீ., திருவாலங்காடு, தூத்துக்குடி மாவட்டம் வைப்பர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here