தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தியேட்டர்கள் மூடல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சினிமாத்துறை சார்ந்த அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன், தியேட்டர்களும் மூடப்பட்டதால் திரைத்துறையைச் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வந்தனர். இதனிடையே, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகளுக்கு சில நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதியளித்ததையடுத்து, அதுதொடர்பான படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதால், தியேட்டர்கள் திறப்பதற்கும் அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலகம் முழுவதும் படிப்படியாக சில நாடுகளில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

முதல்வரே முடிவெடுப்பார்

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தியேட்டர்கள் திறப்பது பற்றி மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், துறை ரீதியாக ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை, தொழிலாளர்களின் நலன் கருதி ஆலோசனை செய்து விரைவில் தியேட்டர்களை திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here