டிக் டாக் வீடியோ மூலம் இணைய உலகில் பிரபலமான ஜி.பி முத்து, குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிக் டாக்

இந்தியாவில் டிக் டாக் வலையில் விழாதவர்களை பார்க்கவே முடியாது. தங்களையும், தங்களது பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்த டிக் டாக் செயலியை பயனர்கள் பயன்படுத்தினர். ஆனால், அதன் மேல் உள்ள அதிகப்படியான மோகத்தால் சர்ச்சை மற்றும் குற்ற நடவடிக்கையில் பலர் சிக்கியதையும் நம்மால் பார்க்க முடிந்தது. முக்கியமாக பெண்கள் இதனால் அதிகளவு பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தவறான வீடியோக்கள், ஆபாசமான வீடியோக்கள் என டிக் டாக் செயலியில் இடம்பெறாத விஷயமே இல்லை என்றே சொல்லலாம்.

அதிரடி தடை

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக் டாக் பயன்படுத்தாத ஆளே இல்லை எனக் கூறலாம். குறிப்பாக லாக்டவுன் காலத்தில் டிக் டாக்கின் பயன்பாடு பெருமளவு அதிகரித்தது. சாமானிய மக்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், டிக் டாக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட பல சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசு மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதால், அந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.

தற்கொலை முயற்சி

இந்தியாவில் டிக் டாக் செயலி மீது தடை விதிக்கப்படுவதற்கு முன்பு மிகவும் பிரபலமாக இருந்தவர் ஜி.பி. முத்து. இதனால் இணையத்தில் வைரலான அவருக்கு, ரசிகர்கள் பலர் உண்டு. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.பி. முத்து, குறிப்பிட்ட சமூகத்தை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டதாக போலீஸ் விசாரணை வரை சென்று பின்னர், எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் வீடு திரும்பினார். டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்ட சமயத்தில் மிகவும் மனம் உடைந்த அவர், பிரதமர் மோடிக்கு கோரிக்கையெல்லாம் விடுத்து வீடியோ வெளியிட்டார். டிக் டாக் தடை காரணமாக இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அவர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், குடும்ப பிரச்சனை காரணமாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்று வருத்தத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஜி.பி முத்து. இந்நிலையில், திடீரென அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஜி.பி. முத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here