நீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக தான் காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

காரசார விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இவை மீதான விவாதத்தின் போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் கூறியதாவது; நீட் எப்போது யார் ஆட்சியில் வந்தது? யார் அறிமுகப்படுத்தினார்கள்? பதில் சொல்லுங்கள். 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை, மீண்டும் கொண்டு வந்து வரலாற்று பிழை செய்தது திமுக. நீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்ததற்கு திமுக தான் காரணம். இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

சட்ட மசோதா தாக்கம்

இதனிடையே, தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலக் கூடிய மாணவர்களுக்கு, மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றில் இளங்கலை படிப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலான சேர்க்கை சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யபட்டது. நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ மாணவர் சேர்க்கையில், உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து தற்போது சட்டப்பேரவையில் இந்த சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here