இன்று 50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திறமையான நடிகை

சினிமாவில் ஹீரோயினாக மட்டும் இல்லாமல் துணை நடிகையாகவும் கலக்குவதில் ரம்யா கிருஷ்ணனுக்கு தனி பங்கு உண்டு. இவர் நடித்தாலே அந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று நினைக்கும் அளவிற்கு, அவரது நடிப்புத்திறன் அனைவரையும் மயக்கி வைத்துள்ளது. நடிகை ரம்யாகிருஷ்ணன் பல திரைப்படங்களில் தனது நடிப்பு திறமையை காட்டிக் கொண்டிருக்கும் பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பிடித்துக் கொண்டு நீலாம்பரியாக தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்தார். ரம்யா கிருஷ்ணன் என்ற பெயரே மறந்து போகும் அளவிற்கு, நீலாம்பரியாக புகழின் உச்சிக்கு சென்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழியிலும் ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தனது வெற்றிக் கொடியை நாட்டினார். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை உள்வாங்கி கனகச்சிதமாக நடித்து கொடுப்பதில் நீலாம்பரிக்கு ஈடு இணை எந்த ஒரு நடிகையும் வர முடியாது.

நீலாம்பரியாக மிரட்டல்

ஆரம்ப கட்டத்தில் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று சொல்லாமல், பல படங்களில் துணை நடிகையாக வலம் வந்தார். கமலஹாசனுடன் பேர் சொல்லும் பிள்ளை, கேப்டன் பிரபாகரன், படிக்காதவன் போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்தார். கடந்த 1999 ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘படையப்பா’ திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பாலும், நடனத்தாலும் அசத்திய ரம்யா கிருஷ்ணனுக்கு, அப்படம் ஒரு திருப்புமுனை ஆகவே இருந்தது. வெறும் காதல், ரொமான்ஸ் படங்களில் மட்டும் நடிக்காமல், அம்மன் கதாபாத்திரத்திலும் நடித்து அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார். அவர் நடித்த பொட்டு அம்மன், ராஜ காளியம்மன், நாகேஸ்வரி உள்ளிட்ட பக்திப் படங்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. இவர் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், கமல்ஹாசனின் பஞ்சதந்திரம் படத்தில் நடித்த கதாபாத்திரம் யாராலும் மறக்கவே முடியாது. பிறகு நடிகர் பிரபாஸூடன் நடித்த பாகுபலி திரைப்படம் உலகளவில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதில் அவர் ஏற்று நடித்த ராஜமாதா சிவகாமி கதாபாத்திரம் அனைவரையும் மிரள வைத்தது. இவரை தவிர வேறு எவராலும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமாவில் பல சாதனைகளை படைத்த நடிகை ரம்யா கிருஷ்ணன், இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here