பாலிவுட்டில் நடக்கும் பல விஷயங்களை பகிரங்கமாக கூறிய நடிகை கங்கனா ரனாவத்துக்கு Y பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

போதை பழக்கம்

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதிலிருந்து பல சர்ச்சைகள் பாலிவுட்டில் உலா வந்து கொண்டு இருக்கின்றன. இதுதொடர்பாக நடிகையும், சுஷாந்தின் காதலியுமான ரியாவை முக்கிய குற்றவாளியாக கருதி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுஷாந்த் சிங்கிற்கு ரியா போதைப் பொருள் கொடுத்ததாகவும், போதைப் பொருள் கும்பலுடன் ரியாவிற்கு பழக்கம் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதனால் ரியா மீது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், பாலிவுட் பிரபலங்கள் பலர் போதைப் பொருட்களை பயன்படுத்துவதாகவும், போதைப் பொருளான கொக்கைன் அனைத்து வீடுகளில் நடக்கும் விருந்துகளில் தாராளமாக கிடைக்கும் என்றும் நடிகை கங்கனா ரனாவத் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். விலை உயர்ந்த பொருளாகவே இருந்தாலும், முதன் முதலாக பார்ட்டிக்கு வருபவர்களுக்கு அது இலவசமாகவே கொடுப்பார்கள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் கங்கனா குறிப்பிட்டிருந்தார். போதைப் பொருள் தடுப்புப்பிரிவினர் பாலிவுட்டை முழுவதுமாக ஆராய்ந்தால் பல முன்னணி நடிகர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் ரத்தப் பரிசோதனை செய்தால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் கங்கனா ரனாவத் கூறியிருந்தார். நடிகை கங்கனாவின் இந்த பகிரங்க குற்றச்சாட்டால், பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பகிரங்க சவால்

பாலிவுட்டில் போதைப் பழக்கம், மாஃபியா, நெப்போடிசம் இருப்பதாக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்த கங்கனா ரனாவத்திற்கு, சிலர் ஆதரவு தெரிவித்தாலும், எதிர்ப்புகளும் வலுத்தன. கங்கனாவின் குற்றச்சாட்டுகளுக்கு சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவ்த் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கங்கனா மும்பைக்கு வரவேண்டாம் எனவும் அவர் கூறினார். இதனை அறிந்த நடிகை கங்கனா, வருகிற 9ஆம் தேதி மும்பைக்கு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், விமான நிலையத்திற்கு வந்த பிறகு அதற்கான நேரத்தை பதிவிடுகிறேன் என்றும் கூறினார். மேலும் முடிந்தால் தன்னை தடுத்துப் பாருங்கள் எனவும் பகிரங்க சவால் விடுத்தார்.

Y+ பாதுகாப்பு

ஆரம்பத்திலிருந்தே பல சர்ச்சைகளை சந்தித்து வரும் கங்கனா ரனாவத்துக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிகிறது. இதனால் அவருக்கு Y+ பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த பாதுகாப்பின் கீழ் சிஆர்பிஎப் படையைச் சேர்ந்த 10 முதல் 11 வீரர்கள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கங்கனாவிற்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என தெரிகிறது. கங்கனா ரனாவத் மும்பைக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், நடிகை கங்கனா ரனாவத் இந்த மாநிலத்தின் மகள். சமூகத்தில் புகழ்பெற்றவர். அவருக்கு ஆபத்து அச்சுறுத்தல் வரும்போது பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. கங்கனா ரனாவத்தின் தந்தையும், சகோதரியும் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கங்கனாவிற்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி கோரிக்கை விடுத்தனர். 9ம் தேதி மும்பைக்கு செல்லும் அவருக்கு இமாச்சல பிரதேச அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு ஜெய்ராம் தாகூர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here