சொன்னது போலவே விநாயகர் சதுர்த்தியான இன்று கைலாசா நாட்டின் வர்த்தக நாணயங்களை வெளியிட்டார் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா.

‘கைலாசா’

தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக அறிவித்திருக்கும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, அங்கு தனது ருத்ர கன்னிகளுடன் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது தான் சொற்பொழிவாற்றும் வீடியோக்களை நித்தியானந்தா வெளியிட்டு வந்தாலும், அவருக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றும் வகையில், கும்பலாக சேர்ந்து நடனமாடும் வீடியோக்களை அவரது ருத்ர கன்னிகள் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் வெளியான ருத்ர கன்னிகளின் அசத்தல் நடன வீடியோ சமூக வலைத்தளங்களில் பெருமளவில் வைரலானது. பெங்களூரு போலீசார் அவரை தேடி வரும் நிலையில், சத்தமில்லாமல் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் நித்தியானந்தா, தனது கைலாசா நாட்டிற்கு அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் தமிழை அறிவித்துள்ளார். மேலும் கைலாசா நாட்டுக்கான கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தனி நாடு செயல்படத் தொடங்கிய நிலையில், பொருளாதாரக் கொள்கை, நாட்டுக்கான கரன்சி, மத்திய வங்கி ஆகியவற்றுக்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், கைலாசா நாட்டுக்கான கரன்சிகள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என நித்தியானந்தா அன்மையில் அறிவித்திருந்தார்.

கைலாசா நாணயம் ரெடி

இதுதொடர்பாக சமீபத்தில் வெளியான வீடியோவில் பேசியுள்ள நித்தியானந்தா, பொருளாதாரக் கொள்கை, வர்த்தகம் உள்ளிட்டவை அடங்கிய 300 பக்க விதிமுறைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்தி முதல் இந்து ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா செயல்படத் தொடங்கும் என்றும் இதற்காக தனது நாடு மற்றொரு நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறினார். அன்றைய தினம் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கைலாசா நாட்டுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். கைலாசா ரிசர்வ் வங்கிக்கு, உலகில் உள்ள இந்துக்களிடம் இருந்து முதலீடு பெறப்படும் என்று கூறிய நித்தியானந்தா, தனது நாட்டைச் சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க வங்கியில் இருந்து கடன் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். வாடிகன் வங்கியைப் போல, இவை அனைத்துமே சட்டப்பூர்வமாக நடைபெறும் எனவும் அவர் கூறியிருக்கிறார். விக்கிபீடியா போல தன்னைப் பற்றி அறிந்து கொள்ள நித்தியானந்தாபீடியா என்ற ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இந்நிலையில், தான் சொன்னதைப் போலவே விநாயகர் சதுர்த்தியான இன்று கைலாசா நாட்டின் வர்த்தக நாணயங்களை (Kailashian Dollar) நித்தியானந்தா வெளியிட்டுள்ளார். கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்களை வெளியிட்டுள்ள நித்யானந்தா, இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

‘நான் கடவுள்’

கைலாசா நாட்டிற்கு தன்னை அதிபர் எனப் பலர் கூறுவதை கிண்டலடித்த நித்தி, தன்னை கைலாசாவின் கடவுள் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார். சர்வதேச போலீஸூக்கே தண்ணிக்காட்டும் நித்தி, தனது ருத்ர கன்னிகளுடன் இணைந்து கைலாசாவிற்கான கட்டமைப்பில் தீவிரம் காட்டி வருகிறார். ‘கைலாசா’ எங்கு இருக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் சூழலில், அதற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்த நித்தி, தட்கல் முறையில் ஞானம் பெற்று, தனி நாடு அமைப்பது வரை வளர்ந்திருப்பது அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது. ஆன்மீக ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நித்தியின் சித்து விளையாட்டு, விரைவில் முடிவுக்கு வரும் என்கின்றனர் நெட்டிசன்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here