கெளரவமாக வாழும் நடிகர்கள் விஜய், சூர்யா குடும்பத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசி வரும் மீரா மிதுனுக்கு இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை நாயகி

சர்ச்சைக்கு பெயர் பெற்ற மீரா மிதுன், சமீபத்தில் ரஜினி, விஜய், சூர்யா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற முன்னணி நடிகர், நடிகைகளைச் சீண்டி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் உள்ளவர்களே அதிகம் என்றும் நெப்போடிசம், மாஃபியா போன்றவைகள் அனைத்தும் தலைவிரித்து ஆடுவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். நெப்போடிசம் புரொடக்ட்ஸ் மட்டும்தான் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள் எனத் தெரிவித்த அவர், ரஜினியை கன்னடர் என்றும் விஜய்யை கிறிஸ்துவர் என்றும் விமர்சித்தார். மேலும் கமல்ஹாசனை சாடிய மீரா, திரிஷா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டினார். பின்னர் சூர்யாவை வம்பிழுத்த மீரா மிதுன், அவருக்கு நடிக்கவே தெரியாது எனக் கிண்டலடித்தார். நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரது மனைவிகளைப் பற்றி தரக்குறைவாக பேசி மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கினார் மீரா மிதுன். தொடர்ந்து நடிகர் விஜய்க்கு எதிராகவும் அவரது ரசிகர்களுக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் பொருமையிழந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்து வருகின்றனர்.

குவியும் கண்டனம்

மீரா மிதுனின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ், தனது டுவிட்டர் பக்கத்தில் IGNORE NEGATIVITY என்று பதிவிட்டார். இந்த டுவீட்டை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினர். அதேபோல் நடிகை சனம் ஷெட்டி மீராவை கண்டித்து வீடியோ வெளியிட்டார். அந்த வகையில், பிரபல இயக்குநர் பாரதிராஜா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப் போலவும், மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சிலை உமிழ்வதைப் போலவும் தமிழ் சினிமா வெளியில் அரங்கேறுவது ஆபத்தான கலாச்சாரம் தொடங்கியுள்ளதோ என ஐயம் கொள்கிறேன். இதோ, நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர். கவர்ச்சிகரமான இந்தத் துறையில் தன் பெயர் கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்!. திருமணம் செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை, அழகுற கட்டமைத்துள்ளனர் என்பதை இத்தனை ஆண்டுகால அவர்களின் வாழ்க்கை நம் முன் கண்ணாடி போல் நிற்கிறதே..!! அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல மீரா மிதுன் என்கிற பெண் தன் வார்த்தைகளை கடிவாளம் போடாமல் வரம்புமீறி சிதறியுள்ளார். திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினராக நான் இதைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்.

நடிகர் சங்கத்திற்கு கேள்வி?

சிறு பெண், பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கெளவுரமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். சூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கும் பணி செய்கிறார். சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படிப்பட்டவர்களை, அவர்களின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல. மீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. உழைத்துப் போராடி, எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரைத் தூற்றிப் பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான் இருக்கும். நம் சக கலைஞர்களின் குடும்பத்தை அவதூறாகப் பேசியும்… நடிகர் சங்கம் மட்டுமல்ல.. வேறெந்த சங்கமும் எந்தவிதமான எதிர்க்குரலும் எழுப்பாதது வியப்பை அளிக்கிறது. இன்றுவரை சங்கத்தின் தலையீட்டை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அசைவில்லை. இவ்வாறு பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here