கேரள மாநிலம் கோழிகோட்டில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த விமானி இந்திய விமானப்படையில் பணியாற்றியது தற்போது தெரியவந்துள்ளது.

விமானம் விழுந்து விபத்து

மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். அந்த வகையில் துபாயில் சிக்கித் தவித்த இந்தியர்களை அழைத்துக் கொண்டு, கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.1344 விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் 184 பயணிகள் மற்றும் 6 விமான பணிக்குழுவினர் என மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தை விமானம் வந்தடைந்த போது, பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. விமானி மிகவும் சிரமப்பட்டு விமானத்தை தரையிறக்கினார். ஆனால், ஓடுபாதையில்  விமானம் நிற்க வேண்டிய நிலையில், திடீரென்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னோக்கி சென்று சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது. பின்னர், 35 அடி ஆழ பள்ளத்தில் பயங்கர சத்தத்துடன் விழுந்து, விமானத்தின் முன்பக்க வாசல் வரையிலான பகுதிவரை இரண்டாக பிளந்தது. அதிர்ஷ்டவசமாக விமானம் தீ பிடிக்காததால், மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

பலி எண்ணிக்கை உயர்வு

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், துரிதமாக செயல்பட்டு விமான இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்த மருத்துவர்கள் 15 பேர் உயிரிழந்துவிட்டதாக முதல்கட்டமாக அறிவித்தனர். இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. விமானி உட்பட 20 பயணிகள் இறந்துள்ளனர். விமான விபத்தில் விமானத்தில் உயிரிழந்தவர்கள் தவிர எஞ்சியவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் விமானப்படை வீரர்

கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானியான விங் கமாண்டர் தீபக் வசந்த் சாத்தே, இந்திய விமானப்படையின் முன்னாள் பைலட்டாக இருந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கேப்டன் தீபக் வசந்த் சாத்தே விமான படையின் 58வது பிரிவை சேர்ந்தவர் என இந்திய விமானப்படையின் ஜூலியட் படைப்பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஏர் மார்ஷல் பூஷண் கோகலே (ஓய்வு) தெரிவித்துள்ளார். கடந்த 1981 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியிலிருந்து தேர்ச்சி பெற்றவர் தீபக் வசந்த் சாத்தே. இந்திய விமானப் படையில் சோதனை பைலட்டாக இருந்த அவர், 58 NDA தங்கப் பதக்கத்தை ஜனாதிபதியிடம் பெற்றுள்ளார். ஏர் இந்தியாவுக்காக கேப்டன் சாதே கமர்ஷியல் விமானியாக மாற முடிவு செய்வதற்கு முன்பு, அவர் ஒரு திறமையான போர் விமானியாக இருந்தார் என அவருடன் பணியாற்றிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here