தென்மேற்கு பருவமழை காரணமாக ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேகமாக நிரம்பும் அணைகள்

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்கு கனமழை கொட்டித் தீர்த்து வருவதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கபினி அணை மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் சுமார் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, கபினி அணையிலிருந்து 50 ஆயிரம் கன அடி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 4,700 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

காவிரியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்

இதன் காரணமாக, ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்துள்ளதால், பிரதான அருவி செல்லும் நடைபாதையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார். தண்டோரா மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் காவிரியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவும், பரிசல் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வர ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அருவிகளிலும், ஆற்றங்கரைகளிலும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here