ஆடி பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு என விசேஷமாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் மக்கள் பூஜைகள் செய்து காவிரித்தாயை வணங்கி வருகின்றனர்.
ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். இந்த நாளில் ஆறுகளை வணங்கி புனித நீராடுவார்கள். பொதுவாக தமிழ் விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா ஆடிப்பெருக்கு ஆகும்.
திருமணம் கைகூடும்
தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினால் ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஓடும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இந்த சமயத்தில் நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவற்றை தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து, பின் உழவு வேலையை தொடங்குவார்கள். ஆடிப்பெருக்கு அன்று காவிரித் தாயை வணங்கினால் ஆண்டு முழுவதும் குடும்பத்தைத் தீமை வராமல் காவிரித்தாய் காப்பாள், குடும்பங்கள் செழிக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று காவிரியில் புனித நீராடுவது சிறப்பு. மேலும் புனித நீராடி காவிரியை வணங்கினால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை.
செல்வம் பெருகும்
கடந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளில் ஆற்றில் தண்ணீர் வராமல் மக்கள் குழாய் தண்ணீரில் குளித்து காவிரியை வணங்கி வழிபட்டனர். இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும், ஊரடங்கு காரணமாக புனித நீராடமுடியாமல், வீட்டிலேயே வித விதமாக சமைத்து, வீட்டு வாசலில் கோலமிட்டு காவிரி, வைகை, தாமிரபரணியை வணங்கி ஆடி பதினெட்டாம் பெருக்குநாளை கொண்டாடுகின்றனர். இன்றைய நாளில் எதை நாம் பல்கிப் பெருக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை வாங்குவது மிகவும் சிறப்பான பலன்களை தரும் என்பார்கள். அனைவரும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்கள் தங்களின் பாடங்களை இன்று முதல் படிக்கத் தொடங்கலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். தங்கம், வெள்ளி வாங்க இன்று சிறந்த நாளாகும்.