சினிமா துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நெபோடிசம் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

சுஷாந்தின் மரணம்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். தொழில்துறையில் நெபோடிசம் காரணமாக சுஷாந்த் தொடர்ந்து அழுத்தங்களுக்கு உள்ளாகி வந்ததாகவும், அந்த மனச்சோர்வில் இருந்ததன் காரணமாக, அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து சினிமா துறையில் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு தொழிற்துறையும் அதன் நட்சத்திரங்களும் இப்போது இருக்கும் நெபோடிசம் பற்றி பேசி வருகின்றனர்.

தமிழ்த் திரையுலகம்

தமிழ் திரையுலகில் சூர்யா, விஜய், தனுஷ், செல்வராகவன் போன்ற அனைவரும் சினிமாவின் பின்புலத்தை சார்ந்தவராக இருப்பதால் அவர்கள் எளிதில் வெற்றிக்கொள்ள முடிவதாகவும், மற்றவர்கள் மிகவும் கஷ்டப்பட்டுதான் சினிமாவில் ஜெயிக்க வேண்டி உள்ளதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. சிவகார்த்திகேயன் பார்ப்பதற்கு உடனடியாக ஜெயித்தது போல் இருந்தாலும் சினிமாவிற்கு வருவதற்கு முன், சுமார் பத்து வருடங்கள் அவர் கஷ்டப்பட்டு தன் சொந்த முயற்சியால் தான் சினிமாவிற்குள் வந்தார். அதேபோல் அஜித்தும் பல தடைகளை தாண்டி தானாகவே ஜெயித்து முன் வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. சினிமா பின்புலம் உள்ளவர்கள் எளிதில் வெற்றி கொள்வதாகவும், சினிமா பின்புலம் இல்லாதவர்கள் பல கஷ்டங்களை மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும் பொதுமக்கள் இடையே ஒரு கருத்து இருந்து கொண்டுதான் இருக்கிறது.

கோலிவுட் நெபோடிசம்

தமிழ் சினிமாவில் தான் இந்த பிரச்சனை இருக்கிறது என்று பார்த்தால், தெலுங்கு சினிமா வட்டாரத்திலும் பரந்து விரிந்திருக்கிறது. தெலுங்கு சினிமாவில் அதிகமாக இருப்பது கிருஷ்ணா குடும்பம், சிரஞ்சீவி குடும்பம், அக்கினேனி குடும்பம், டகுபாட்டி குடும்பம் என்று சினிமா வட்டாரத்தை அவர்களுக்கு உள்ளேயே ஒரு முடிச்சு போட்டுக்கொண்டு இருக்கின்றனர். தயாரிப்பாளர் முதல் இயக்குநர் வரை அவர்களே அந்த படத்தின் வெற்றியை பங்குபோட்டு கொள்வதும், அவர்களே வாழ்ந்து கொண்டும் இருக்கின்றனர். அதேபோன்று கன்னட சினிமாவிலும் ராஜ்குமார், சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் என்று தங்களுக்குள்ளே ஒரு வட்டம் போட்டுக் கொண்டு, அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அனைவரும் பாதிப்பு

நெபோடிசத்தை பல முன்னணி நடிகர், நடிகைகள் ஒப்புக்கொண்டதால் சினிமா வட்டாரத்தில் இது ஒரு பெரிய பிரச்சனையாகவே வலம் வந்து கொண்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் நெபோடிசத்தால் தான் பாதிக்கப்பட்டதை தெரிவித்த நாள் முதல், ஒவ்வொருவராக தாங்கள் அனுபவித்த பிரச்சனைகளை கொட்டித்தீர்த்து வருகின்றனர். அந்த வகையில், ‘நட்டி’ என அழைக்கப்படும் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நடராஜன் சுப்பிரமணியம் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் “தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு… யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க… யாருங்க நீங்க????.” என்ற குறிப்பிட்டுள்ளார். இதனை சினிமா பின்புலம் உள்ள சில நடிகர், நடிகைகள் மறுத்து வருகின்றனர். பிரபல நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு சமீபத்தில் கூறியிருப்பதாவது “சினிமா பின்புலம் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கின்றது. ஆனால் அதனை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் பலரும் இன்னும் போராடிக் கொண்டு தான் இருக்கின்றோம் என்று கூறி இருக்கிறார்.

அடிப்படை ஆசை

சினிமாவில் அடி எடுத்து வைக்க வேண்டும். கதாநாயகனாகவோ, கதாநாயகியாகவோ வலம் வரவேண்டும் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஆசை தான். நெபோடிசம் காரணமாக பலருக்கும் அந்த கனவுகள் இடிந்து சுக்குநூறாக போகின்றது. அதனால் இந்த நெபோடிசத்தை விட்டு விட்டு, அனைவரும் ஒன்றிணைந்து சினிமாத் துறையை வளர்க்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here