கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது ஏற்கனவே குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில் தற்போது செந்தில்வாசன் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்ச்சை கருத்து

‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி பாடல் குறித்தும், இந்துக்கடவுள் குறித்தும் அவதூறாக பேசி வீடியோ பதிவிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கந்தசஷ்டி குறித்த விமர்சனத்துக்காக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மன்னிப்பு கேட்டதோடு, சம்மந்தப்பட்ட வீடியோவையும் நீக்கியது. இருப்பினும் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி சுரேந்திரன் நடராஜன், செந்தில்வாசன் உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதுடன், யூடியூப் சேனலில் இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட வீடியோக்களும் அதிரடியாக நீக்கப்பட்டன.

மேலும் ஒருவர் மீது குண்டாஸ்

கந்தசஷ்டி பாடல் குறித்து சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்த ‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலுக்கு திரையுலகினரும், ஆன்மீகவாதிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். நடிகர்கள் பிரசன்னா, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். இந்த நிலையில், கந்தசஷ்டி கவசம் பாடல் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்ட ‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரன் மீது நேற்று குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து செந்தில்வாசன் மீதும் தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here