புதுச்சேரி அருகே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சிலை மீது காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர்.சிலை மீது காவி துண்டு

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் – விழுப்புரம் நெடுஞ்சாலையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் காவித் துண்டு அணிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுச்சேரி மாநில அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள், சிலை மீது இருந்த காவித் துண்டை அப்புறப்படுத்தி, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இச்சம்வத்தை கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவித் துண்டு அணிவித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுகவினர் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

கடும் கண்டனம்

இந்த நிலையில், எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சிலைக்கு காவி துண்டு அணிவித்து களங்கப்படுத்திய கொடுஞ்செயல் மன வேதனையை தருகிறது. இச்செயல் காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது வருத்தத்தை தருகிறது. ஒருமைப்பாடு, ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்து ஓட்டு அரசியல் பிழைப்பிற்கு சிலர் திட்டமிடுகின்றனர். சிலையை அவமதித்தவர்கள், அவர்களை பின்னாலிருந்து இயக்கியவர்களை தோலுரித்து காட்ட வேண்டும். சிலையை அவமதித்தவர்கள் மீது புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here