கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக திருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சுவாமி தரிசனம்

புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மற்ற வழிபாட்டு தலங்களைப் போல் திருப்பதி ஏழுமலையான் கோயிலும் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 8ம் தேதி ஏழுமலையான் கோயில் திறக்கப்பட்டு, சுவாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. முதல் 2 நாட்கள் தேவஸ்தான ஊழியர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில், ஜூன் 10ம் தேதி முதல் பொது தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கோயிலுக்கு வரும் பக்தர்கள் சமூக விலகலை கடைபிடித்து ஏழுமலையானை தரிசித்து மனமுருக வழிபட்டு வந்தனர்.

கொரோனாவால் உயிரிழப்பு

இதனிடையே, ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்களில் 15 பேர் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என மொத்தம் 160 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஐயங்காருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாசமூர்த்தி (75) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். திருப்பதி கோயிலில் கொரோனாவுக்கு முதல் உயிர் பலி ஏற்பட்டது மற்ற அர்ச்சகர்களிடம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முழு ஊரடங்கு

இதனிடையே, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக கவுன்டர்களில் டிக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டு, ஆன்லைனில் மட்டுமே தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என திருமலை – திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக திருப்பதியில் இன்று முதல் ஆகஸ்ட் 5ந் தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 15 நாட்களுக்கு பகல் 11 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை கடைகள், உணவகங்கள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here