பள்ளிப்பருவக் கால காதலை எதார்த்தமாக வெளிப்படுத்திய “96” படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

முதல் காதல் 

எத்தனையோ நண்பர்கள் பள்ளியிலும், கல்லூரியிலும் நம்முடன் படித்தாலும் யாரோ ஒருவரது தனித்துவமான பேச்சும் அவர்களது நடவடிக்கையும் மனதை கவரும். பள்ளியில் ஆரம்பித்து கல்லூரி முடிக்கும் வரை சிலருக்கு அந்த உறவுகள் தொடரும். அதிலும் சிலருக்கு தான் அது காதலாகவும், பிறகு திருமணத்திலும் முடியும். எத்தனையோ பேர் காதலித்தாலும் திருமணம் செய்துகொள்ள முடியாமல் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வேறு ஒரு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அந்த முதல் காதலை யாராலும் மறக்கவே முடியாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்தப் பழைய காதல் நினைவுக்கு வந்து கொண்டேதான் இருக்கும். அதிலும் உண்மையாகவும், நேர்மையாகவும் காதலித்த சிலருக்கு அது காலம் முழுவதும் மனதில் வரமாகவே  இருக்கும். அந்த வகையில் நம்ம ஊரு பசங்களும், பெண்களும் பலபேர் பள்ளிப்பருவத்தில் ஏற்பட்ட அழகான காதலை வெளிப்படுத்தியும் நிறைவேறாமல் போவதுண்டு. இன்னும் சிலருக்கு காதலை சொல்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படாமல், வாழ்க்கையில் சேர முடியாமலே பிரிவதும் உண்டு. சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல கணவன், மனைவிக்கும் பழைய காதல் கதைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. 

பிளாஷ் பேக் 

காதல் படங்கள் என்றாலே நம் ஊர் காதலர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் எதார்த்தமான நடிப்பும் பக்கத்து வீட்டுப் பையன் போலிருக்கும் ஹீரோவும் இருந்தால் அந்தப் படம் ஆண்களை மட்டும் அல்ல பெண்களையும் வெகுவாக கவரும். இப்போது புரிகிறதா நம்மூரில் “96” என்ற படம் சூப்பர் ஹிட் அடித்தது எப்படி என்று. வெற்றி படத்திற்காக ஏங்கி கொண்டிருந்த நடிகை திரிஷாவுக்கு இது ஒரு டர்னிங் பாயிண்ட் என்றே சொல்ல வேண்டும். இந்தப் படத்தை பார்த்த ஒவ்வொருவரும் ராம் – ஜானு என்ற கதாபாத்திரத்தில் ஒன்றிப்போய் தங்களையும் அந்த கதாபாத்திரத்தில் வைத்து யோசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். மறந்துபோன காதலைக்கூட நினைவூட்டும் வகையில் இப்படம் அமைந்து, அனைவரையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது. விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவின் எதார்த்த நடிப்பால் “96” படம் பெரும் அளவில் பேசப்பட்டது. இப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆன பிறகும் அதுபற்றிய பேச்சுக்களும், விமர்சனங்களும் குறையவே இல்லை. படத்தின் ஏதாவது ஒரு வீடியோ அல்லது புகைப்படம் வெளிவந்தால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கிறது.

த்ரோ பேக் வீடியோ 

அந்த வகையில், சமீபத்தில் இயக்குனர் பிரேம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “96” படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் திரிஷாவும், விஜய் சேதுபதியும் தரையில் அமர்ந்தவாறு கதை கேட்கின்றனர். இந்த வீடியோ அவர்களது ரசிகர்களிடையே பெருமளவு பகிரப்பட்டு வருகிறது. இப்படம் தமிழில் வெற்றி ஆனதை தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. காதல் என்றால் அது தமிழ் பசங்க தான் என்று சொல்லும் அளவிற்கு “96” படம் தமிழில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற மொழிகளில் இப்படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here