கேரளாவில் தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது என்று என்ஐஏ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தங்கம் கடத்தல்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, அந்தத் தூதரகத்தின் பெயருக்கு வந்த பார்சலைக் கடந்த மாதம் 30ம் தேதி சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அதில் 30 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐக்கிய அரபு தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஷரீத் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதில், ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் அந்த பொருட்களுக்கு உரிமை கோரியவர்களில் ஒருவர் என்றும் சுங்கத்துறை வட்டராங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின. கேரள தலைமைச் செயலகத்தில் ஐ.டி. துறை ஆபரேஷனல் மேலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா, தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கியது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்வப்னா சுரேஷ் கைது

தங்கக் கடத்தலில் சிக்கிய ஊழியரை காப்பாற்ற முயற்சிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய விசாரணை முகமைக்கு மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷை கடந்த சில நாட்களாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில், பெங்களூருவில் அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் சந்தீப் நாயர், பாசில் பரீத் ஆகியோரும் கைதாகினர்.

திடுக்கிடும் தகவல்

கைது செய்யப்பட்ட ஸ்வப்னா உள்ளிட்டோர் காரிலேயே கேரளாவின் கொச்சி நகருக்கு அழைத்து வரப்பட்டனர். செல்லும் வழியில் ஆலுவாவில் உள்ள மருத்துவமனையில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து அவர்களை 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது என என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற தங்கக் கடத்தல் குறித்த ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here