வடகொரியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்துவிட்டோம் என அதிபர் கிம் ஜாங் உன் பெருமிதம் கொண்டதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தடுத்துவிட்டோம்

தொழிலாளர் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பற்றி அதிபர் கிம் ஜாங் உன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் ”உலக அளவில்  கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையிலும், அதனை வடகொரியாவில் கால்பதிக்க விடாமல் தடுத்துவிட்டோம்” என்று கிம் ஜாங் உன் கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா பரவத்தொடங்கியதும் வடகொரியா தனது எல்லையை மூடியதுடன், சீனாவில் இருந்து வந்த ஆயிரக்கணக்கானோரைத் தனிமைப்படுத்தியது.

என்ன ஆனது?

வடகொரியாவில் கொரோனா வைரஸ் அதிக அளவு இருப்பதாக பரவலாக கூறப்பட்டு வந்தாலும், அதுபற்றிய எந்த செய்தியும் இதுவரை வெளியாகாமல் இருந்தது. தற்போது கிம் ஜாங் உன் ஆற்றிய உரை, வடகொரியாவில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்று கருதும் வகையில் உள்ளது. இதுநாள் வரை கொரோனா தொற்று பற்றிய எந்த தகவலையும் வடகொரியா வெளியிடாவிட்டாலும், அந்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்டன. அண்டை நாடுகளில் இருந்து புதிய தொற்றுக்கள் பரவ வாய்ப்பு உள்ளதால், உச்சபட்ச விழிப்புணர்வுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கிம் ஜாங் உன் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிபர் கிம் ஜாங் உன் பற்றி பலவிதமான சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களோ, வீடியோக்களோ அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இதனால் அதிபருக்கு என்ன ஆனது? என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here