தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தை, மகன் மரணம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிங்ஸ். கடந்த 20-ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி அவரையும் அவரது தந்தை ஜெயராஜையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையே, கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த பென்னிங்ஸுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறைக் காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் பென்னிக்ஸ் நேற்றிரவு உயிரிழந்த நிலையில், தந்தை ஜெயராஜ் இன்று காலை உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை, பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட்

விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில் 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாகவும், சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

கடையடைப்பு போராட்டம்

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்திற்கு திமுக எம்.பி., கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிஜிபியிடம் அவர் புகாரும் அளித்துள்ளார். தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மனித உரிமை மீறல்

இந்த சம்பவத்திற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல்துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல்துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here