மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் இயக்குனர் கே.ஆர். சச்சிதானந்தம் என்கிற சச்சி உடல்நலக் குறைவால் காலமானார்.

‘அய்யப்பனும் கோஷியும்’

கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்.’ சச்சி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பீஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். காவல்துறை அதிகாரிக்கும், அதிகார வர்க்கத்தில் உள்ள நபருக்கும் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது.

தமிழில் ரீமேக்

‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய, தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார் என்றும் இதில் பிருத்விராஜ் கேரக்டரில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில், சரத்குமாரும் சசிகுமாரும் நடிக்க இருப்பதாகவும் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி தயாரிப்பாளர் கதிரேசனிடம் கேட்டபோது, இன்னும் யாரிடமும் பேசவில்லை. யார் நடிக்கிறார்கள் என்பதும் முடிவாகவில்லை எனக் கூறினார்.

தெலுங்கில் ரீமேக்

அதேபோல் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார். இவர் ‘ஜெர்சி’, ‘அலா வைகுண்டபுரம்லு’ ஆகிய படங்களை தயாரித்தவர். இந்தப் படத்தில் பீஜூமேனன் நடித்த கதாபாத்திரத்திற்கு பாலகிருஷ்ணாவையும், பிருத்விராஜ் நடித்த பாத்திரத்திற்கு ராணா டகுபதியையும் நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

மரணம்

இந்த நிலையில், 48 வயதாகும் ‘அய்யப்பனும் கோஷியும்’ பட இயக்குனர் கே.ஆர்.சச்சிதானந்தம் சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென இதயத்துடிப்பில் பிரச்சனை ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சச்சிதானந்ததின் இறப்புக்கு சினிமா பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here