பாகுபலி படத்தில் பட்ட சிரமத்தைவிட ‘காடன்’ படத்தில் அதிகம் சிரமப்பட்டதாக நடிகர் ராணா தெரிவித்துள்ளார்.

பாகுபலி நடிகர்

பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் ராணா. தெலுங்கு நடிகரான இவர், தமிழ் மற்றும் இந்தி திரையுலகிலும் கால் பதித்து வருகிறார். ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தனியார் நிறுவனத்தின் நிறுவனர் மிஹிகா பஜாஜூடன் சமீபத்தில் ராணாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலாகின.

‘காடன்’

தொடர்ந்து சினிமாவில் கவனத்தை செலுத்தி வரும் ராணா, தமிழில் பிரபு சாலமன் இயக்கும் ‘காடன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அவருடன் விஷ்ணு விஷாலும் இணைந்து நடித்துள்ளார். காட்டில் வாழும் யானையின் பழக்க வழக்கங்களை மாற்றுவதால் ஏற்படும் பிரச்சனைகளையும், யானைப் பாகனின் வாழ்க்கையையும் மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. ஏப்ரல் 2ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது.

மிகவும் சிரமப்பட்டேன்

‘காடன்’ படத்தில் நடித்தது குறித்து ராணா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது; இதற்குமுன் நான் நடித்த படங்களுடன் ஒப்பிடும் போது, ‘காடன்’ படத்தில் நடிக்கும் போதுதான் மிகவும் சிரமப்பட்டேன். சுமார் 150 -170 கிலோ எடையுள்ள யானையின் தந்தத்தை தோளில் சுமந்தபடி நடந்து சென்றேன். பாகுபலியைவிட இப்படத்தில் சிரமப்பட்டேன் எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here