கொரோனா தொற்றால் உயிரிழந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகனின் மறைவை ஏற்க என் மனம் மறுக்கிறது என்று இயக்குநரும், நடிகருமான அமீர் மிகவும் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

ஜெ. அன்பழகன் மறைவு

திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2ம் தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஜெ. அன்பழகனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜெ. அன்பழகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிறந்த தேதியிலேயே மரணம்

பிறந்த தேதியிலேயே ஜெ. அன்பழகன் உயிரிழந்திருப்பது அனைவரையும் பெரும் சோகத்தில் அழ்த்தியுள்ளது. ஜெ. அன்பழகனின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். திரையுலகினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கலை தெரிவித்தனர். அந்த வகையில் இயக்குனரும், நடிகருமான அமீர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அமீர் இரங்கல்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எனதருமை அண்ணனும், திமுக எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்கிற செய்தியை கேட்டறிந்த நாளில் இருந்தே மனம் வேதனைப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவரது மகன் திரு. ராஜா அன்பழகன் அவர்களிடம் அண்ணனின் உடல் நிலை குறித்து தொலைபேசியில் விசாரித்துக்கொண்டே இருந்தேன். இந்நிலையில் இன்று காலை அண்ணனின் மறைவுச் செய்தி குறித்து கேட்ட நிமிடம் முதல் இப்போது வரை அந்த உண்மைச் செய்தியை ஏற்க என் மனம் மறுக்கிறது.

உருக்கம்

பழகும் தன்மை, நேர்மையான பேச்சு, அரசியலற்ற அன்பு, உண்மையைச் சொல்லும் துணிச்சல், எதிரே இருப்பவரின் இடத்தில் தன்னை நிறுத்திப் பார்த்து முடிவெடுக்கும் பண்பு…. என சொல்லிக்கொண்டே போகலாம் அவரிடம் நிறைந்திருந்த பல்வேறு குணாதிசயங்களை. ஒரு அரசியல்வாதியுடன் சேர்ந்து படம் எடுப்பதா என்கிற என்னுடைய ஐயத்தை, எங்கள் முதல் சந்திப்பிலேயே தகர்த்தெரிந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நட்பை வளர்த்து என் உள்ளத்தில் குடி புகுந்து கொண்ட ஆளுமை அவர். அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை இன்று நான் இழந்திருக்கிறேன் என்கிற வேதனையோடு மட்டுமல்லாமல் அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறவுகளின் உள்ளத்தில் சாந்தியையும் அவரது இறப்பிற்குப் பின் உள்ள வாழ்க்கையில் அமைதியையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என்று இயக்குநர் அமீர் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here