பிரபல இயக்குநர் மணிரத்னம் தற்போது வெப்சீரிஸ் இயக்கவிருக்கும் முடிவினை கோலிவுட் வட்டாரம் வெகுவாக பாராட்டி வருகிறது.
எப்படி சாத்தியம்?
தமிழில் முன்னணி நடிகர்களான விக்ரம், கார்த்தி, நாசர், ஜெயம் ரவி, நயன்தாரா, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல இந்திய திரையுலக பட்டாளம் நடிக்கும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பொன்னியின் செல்வன்’ படத்தின் சுமார் 40% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. கொரோனா ஊரடங்கால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலைமை சரியானவுடன் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் சுமார் 100 நடிகர்கள் இருப்பது, போர் காட்சிகள் போன்றவை படமாக்க வேண்டியதிருப்பதால் இது எப்படி சாத்தியமாகும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வெப்சீரிஸ்
காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அதிசயம், சாந்தம் உள்ளிட்ட 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் வெப் சீரிஸாக இயக்கவுள்ளனர். இதனை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
இயக்குநராக அறிமுகமாகும் நடிகர்
மணிரத்னம், கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், அரவிந்த் சாமி மற்றும் கார்த்திக் நரேன் என 5 இயக்குநர்கள் உறுதியாகியுள்ளனர். மீதமுள்ள 4 இயக்குநர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும். இந்த வெப் சீரீஸின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.
‘ரோஜா- 2’?
‘ரோஜா- 2’ திரைப்படத்தை மணிரத்னம் எடுக்கிறார் என்று வெளிவந்த செய்தியை மறுத்து, அவர் தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது. தற்போது அவர் வெப்சீரிஸ் மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மட்டும் கவனம் செலுத்தவிருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் மூலமாக வரும் பணத்தை தொழிலாளர்களின் நலனுக்காகக் கொடுக்க மணிரத்னம் திட்டமிட்டு இருக்கிறார் என்று கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இதுதொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. மணிரத்னத்தின் இந்த முயற்சியை கோலிவுட் வட்டாரம் வெகுவாக பாராட்டி வருகிறது.