ஹரியானா மாநிலத்தில் அரசு அதிகாரியை பாஜக பெண் உறுப்பினர் ஒருவர் பொதுமக்கள் மத்தியில் செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், சம்மந்தப்பட்ட பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
டிக்டாக் பிரபலம்
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சோனாலி பொகத். டிக்டாக் பிரபலமான இவருக்கு, தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சோனாலி மிகவும் பிரபலமடைந்ததால், அவருக்கு பாரதிய ஜனதா கட்சி ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. தேர்தலில் போட்டியிட்ட சோனாலி, 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
அதிகாரிக்கு செருப்படி
இந்த நிலையில், விவசாய சந்தையை ஆய்வு செய்த சோனாலி, மக்கள் அளித்த புகார்களை எடுத்துக்கொண்டு வேளாண் உற்பத்தி சந்தை குழுவின் உறுப்பினர் சுல்தான் சிங்கை சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. கோபத்தின் உச்சிக்கு சென்ற சோனாலி, அந்த அதிகாரியை செருப்பால் சரமாரியாக தாக்கினார்.
வேடிக்கை பார்த்த போலீஸ்
அரசு அதிகாரியை பாஜகவை சேர்ந்த பெண் ஒருவர் செருப்பால் அடிக்கும் போது காவல்துறையினர் வேடிக்கை பார்க்கும் அந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமாதானப்படுத்த முயற்சிக்கும் முன்பே சோனாலி அடிக்க தொடங்கிவிட்டார் என சுல்தான் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கண்டனம்
இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுந்தீப் சிங் சுர்ஜேவாலா, சோனாலி போகட் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.