சர்ச்சைக்குரிய வகையிலான வசனங்களும், ஆபாச காட்சிகளும் இடம் பெற்றிருந்ததாக கூறப்படும் ‘காட்மேன்’ வெப்சீரிஸ் டீசரை வெளியிட்ட படக்குழுவுக்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

‘காட்மேன்’ சர்ச்சை

‘காட்மேன்’ வெப்சீரீஸ் பற்றிய சர்ச்சைகள் தினந்தோறும் இணையத்தில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. காட்மேன் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது சர்ச்சை எழுந்ததையடுத்து, தற்போது ஒட்டு மொத்த கவனமும் அதில் நடித்த நடிகர் டேனியல் பாலாஜி பக்கம் திரும்பியுள்ளது. இவர் காட்மேன் வெப்சீரீஸில் தவறான வசனங்களை பேசியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டேனியல் பாலாஜி விளக்கம்

காட்மேன் வெப்சீரிஸ் பற்றி வரும் சர்ச்சைகளுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என டேனியல் பாலாஜி தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. இந்த வெப்சீரிஸின் வசனங்களுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும், வெறும் டீசரை வைத்து எதையும் கணக்கிட வேண்டாம் எனவும் டேனியல் பாலாஜி தெரிவித்துள்ளார். இதில் மொத்தம் 15 நாட்களே நடித்துள்ளதாகவும், யாரையும் எந்த மதத்தினரையும் எந்த ஒரு பிரிவினரையும் அவமானப் படுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காயத்ரி ரகுராம் கண்டனம்

காட்மேன் சர்ச்சையில் சிக்கியிருக்கும் டேனியல் பாலாஜி பற்றியும், காட்மேன் வெப்சீரீஸ் பற்றியும் நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்த வெப்சீரிஸின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை விசாரணை செய்ய வேண்டும். பிராமணர்களை நேரடியாக குறிவைக்கும் அந்த டீசர் கட்டை வெளியிட்ட படக்குழுவுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுக்கொள்ள முடியாது

மேலும், போன் கால்களின் மூலம் சினிமா பிரபலங்களுக்கு தொல்லை கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும். பாலாஜி தொடர்ந்து எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருப்பவர். மேலும் இந்த வெப் சீரியஸில் நடிகர்களுக்கு அவர்களின் கதாபாத்திரங்கள் மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளது, முழுக்கதையும் விவரிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த டீசரை திரித்து சர்ச்சைக்குரியதாக மாற்றியுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.