60 பேரைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்தலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதற்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

படப்பிடிப்புகள் ரத்து

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த மார்ச் 19ம் தேதி முதலே சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அரசு அனுமதி

இதையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதியளித்த தமிழக அரசு, பின்னர் 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்தவும் அனுமதி அளித்தது. படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அதனை உறுதி செய்து கொண்டு படப்பிடிப்புகள் நடத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

கஸ்தூரி கருத்து

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு 60 பேர் வரை பணியாற்றலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பது, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் இனிப்பான செய்தியாக இருந்தாலும், அதில் உள்ள ஆபத்தை உணர்ந்து கலைத்துறையினர் மிகவும் கவனமாக செயல்படுவது அவசியம் எனக் கூறியுள்ளார்.

தளர்வு எதற்கு?

மணந்தால் 50 பேர் மட்டும், இறந்தால் 20 பேர் மட்டும் என்ற கடுமையான கட்டுப்பாடு உள்ள நேரத்தில் பொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு தளர்வு எதற்கு, எதனடிப்படையில் என மக்கள் கேள்வி கேட்பார்கள். படப்பிடிப்பு தளத்தில் கொரோனாவை தடுப்பது, சமூக இடைவெளி போன்றவை மிகப்பெரிய சவால்கள். 60 பேர் தினமும் கூடினால் கண்டிப்பாக தொற்று அபாயம் உண்டு.

படப்பிடிப்புகளை தவிர்க்கலாம்

ஏற்கனவே கலைஞர்களை விமர்சிக்கின்றனர். சினிமாவால், டிவியால் சமூகம் பாழாகிறது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இதில் ஷூட்டிங் செய்து கொரோனா வந்துவிட்டால் வேறு வினையே வேண்டாம். அப்புறம் மொத்தமாக மூடிவிட்டால் என்ன செய்வது. தமிழகத்தில் கொரோனாவின் வீரியம் எப்போது குறையும் என யாருக்கும் தெரியாத நிலையில், இன்னும் ஒன்றிரண்டு மாதம் படப்பிடிப்புகளை தவிர்ப்பதே நல்லது. ஆனால் எல்லோருக்கும் அதற்கு பொருளாதாரம் இடம் கொடுக்காது. வயிற்றுப்பாட்டை பார்க்க வேண்டும். மிகுந்த எச்சரிக்கை, தொலைநோக்கு பார்வை, பொறுமை அவசியம் எனக் கஸ்தூரி கூறியுள்ளார்.

கடும் எதிர்ப்பு

படப்பிடிப்பு தொடர்பான நடிகை கஸ்தூரியின் இந்த கருத்துக்கு நடிகர், நடிகைகளும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here