தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது.

படப்பிடிப்புகள் ரத்து

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி முதலே சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

போஸ்ட் புரொடக்ஷன்

இதையடுத்து கடந்த வாரம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியது. தொழிலாளர்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமென அரசு அறிவுறுத்தியது.

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி

இந்த நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி அளித்துள்ளது.

நிபந்தனைகள்

அதன்படி, படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், சாதனங்கள் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதி மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here