தமிழகத்தில் மறுபடியும் டாஸ்மாக் கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும் என ஆட்சியாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கண்டனம்

40 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் உற்சாகமடைந்த மது பிரியர்கள், சமூக இடைவெளியை கூட கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர். இதற்கு பெண்கள், அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள் என பலர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

அதிரடி உத்தரவு

இதற்கிடையே, திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மே 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மேல்முறையீடு

டாஸ்மாக்கை மூடியதால் அரசுக்கு வருமானம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி டுவிட்

அந்த வகையில், தமிழக அரசின் இந்த முடிவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்’’ என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here