மற்ற தொழில்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியிருப்பது போல், சினிமா டப்பிங், ரீ ரெக்கார்டிங் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ‘பெப்சி’ வேண்டுகோள் விடுத்துள்ளது.

முதல்வருக்கு கடிதம்

இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே. செல்வமணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் மத்திய – மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே தமிழ் திரைப்படத்துறையின் அனைத்து வேலைகளையும் நிறுத்தி ஏறக்குறைய 50 நாட்களை கடக்க இருக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அபாயகரமான சூழல்

இனியும் வேலை முடக்கம் நீடிக்கப்பட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்த தொழிலாளர்கள், பசிப்பிணியில் பட்டினி சாவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாயகரமான சூழ்நிலையில் உள்ளதாக செல்வமணி கூறியுள்ளார். தற்போது 17 தொழில்துறைக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கி இருப்பதை போல் திரைப்பட துறைக்கும் தொலைக்காட்சிகளுக்கும் நிபந்தனையோடு அனுமதி வழங்கிட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தளர்வு வேண்டும்

குறைந்தபட்சம் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு அல்லாத பணிகளான ரெக்கார்டிங், ரீ ரெக்கார்டிங், டப்பிங், போன்ற போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கும், தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கும் அனுமதி வழங்கினால் சம்மேளனத்தின் 40, 50 சதவீத தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும், அவர்கள் பட்டினி சாவிலிருந்து தப்பிக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்வதாக அந்த கடிதத்தில் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

சமூக இடைவெளி, உறுதி

மத்திய – மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் ஏற்று இந்த பணிகளை சமூக இடைவெளியுடன் மருத்துவ பாதுகாப்புடன் சுகாதாரமான முறையில் செய்வோம் என்றும் உறுதி அளிப்பதாகவும் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here