தமிழகத்தில் நாளை முதல் 500 சில்லறை டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

கணக்கெடுப்பு

தமிழகத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அப்போதைய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டு, எந்தெந்த கடைகளை மூடலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

500 கடைகள் மூடல்

இந்நிலையில், தமிழ்நாட்டில் 500 சில்லறை விற்பனை டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவித்தார். மேற்படி, அறிவிப்பிற்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட 20.04.2023 நாளிட்ட அரசாணை எண்.140, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது. மேற்படி, அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை (22.6.2023) நாளை முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (22.6.2023) நாளை முதல் செயல்படாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது”. இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here