வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் கிழக்கு திசை காற்று காரணமாக தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இடி, மின்னலுடன் மழை

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; “வடதமிழக பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூன் 21) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மிதமான மழை

நாளை (ஜூன் 22) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழை

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை ஆய்வு மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here